பிரதமராகும் தகுதி மம்தாவுக்கு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, தற்போது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்து பல்டியடித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் 22 கட்சிகளின் சார்பில் அண்மையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு பிறகு, ‘நாட்டை வழிநடத்தும் எல்லா தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது. அவர் சிறந்த நிர்வாகி” என்று குமாரசாமி பேட்டியளித்தார். அவரது பேட்டியால் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் என்று பாஜக விமர்சிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சியை நடத்திவரும் குமாரசாமியின் இந்தப் பேச்சை கர்நாடக காங்கிரஸாரும் ரசிக்கவில்லை.  

இந்நிலையில், “பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி கூட்டணிக்கு தேவை” என்று குமாரசாமி பேசி பல்டியடித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ராகுல் பிரதமர் வேட்பாளரக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவு.  நிறைய மாநில கட்சிகள் உள்ளன. பாஜகவை விடஎல்லா கட்சிகளிலும் திறமையான தலைவர்கள் இருக்கிறார்கள். ஏன் மாயாவதி, மம்தா பானர்ஜி இருக்கக் கூடாது என்றுதான் நான் சொன்னேன். ஆனால், எங்களுடைய விருப்பம் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்துள்ளார். 

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக முன்மொழிந்த பிறகு, வேறு கட்சிகள் அதை பெரிதாக வழிமொழியவில்லை. முன்னாள் பிரதமர் தேவகவுடா ராகுலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், குமாரசாமியின் கருத்தால் குழப்பம் ஏற்பட்டது. தற்போது குமாரசாமி ராகுலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் காங்கிரஸ் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.