நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர தயக்கம் காட்டிவரும் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக நடத்தும் மாபெரும் பேரணியில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துவந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் சேர்க்க அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் 24 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து பாஜக பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதை முறியடிக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.

 

இ்தன் ஒரு பகுதியாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த மம்தா பானர்ஜி முடிவு செய்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கும் அந்தக் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா ராஷ்டிரிய கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் மறுத்துவிட்டார். காங்கிரஸ், பாஜக அல்லாத மெகா அணி அமைக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் ஈடுபட்டு வந்தார். ஆனால், ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அவர் அறிவித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

ராகுலுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்ததை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை தேர்தலுக்கு முன்பு மம்தா பானர்ஜியுடன் கூட்டணி ஏற்படாவிட்டாலும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு இது அச்சாரமாக இருக்கும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம்!