பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய புரா பஜாரில் உள்ள வர்த்தகர்கள், மக்களிடம் நேற்று நேரடியாகச் சென்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறைகளைக் கேட்டறிந்தார்.

மத்தியஅரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாததாக கடந்த 8-ந்தேதி அறிவித்தது. அது முதல் மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுக்களை வங்கியிலும், தபால்நிலையங்களிலும் மாற்ற கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களின் சேமிப்பைக்கூட எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், பெரிய துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மத்தியஅரசின் முடிவைக் கண்டித்து, காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

கடந்த புதன்கிழமை, டெல்லியில், முதல்வர் கெஜ்ரிவால், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், இணைந்து, மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு அளித்தார். மேலும், முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து, முதல்வர் மம்தா, தனியாக பேரணியும் ரிசர்வ் வங்கியை நோக்கி நடத்தினார்.

இந்நிலையில், ஆசியாவில் மிகப் பெரியதான, கொல்கத்தாவில் உள்ள புராபஜாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார். அங்குள்ள மக்களிடம், வர்த்தகர்கள், சில்லரை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரிடம் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் கேட்டு அறிந்தார்.

அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,“ மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பால், மக்கள் தங்கள் சேமிப்பைக் கூட வங்கியில் இருந்து எடுக்க முடியவில்லை. மத்திய அரசிடம் பணம் இல்லாததால், மக்களை பணம் எடுக்க தடுத்து வருகிறது. விவசாயிகள் பணம் இல்லாமல் கண்ணீர் விடுகிறார்கள். அவர்களுக்கு உணவு இல்லாவிட்டால், எதை சாப்பிடுவார்கள்?. வங்கி ஊழியர்களும் கடும் மன அழுத்தத்தில் இரவு பகலாக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள். அனைத்து தரப்பினரும் கடும் அழுத்ததில் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.