மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மண்டையை உடைத்தவர் 29 ஆண்டுகளுக்குப்பின் குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மம்தா பானர்ஜியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது அந்த இளைஞர் மார்க்சிஸ்ட் கட்சியில் இளைஞர் பிரிவு தலைவராக இருந்தார்.

கடந்த 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள மம்தாவின் காலிகட் இல்லத்தின் அருகே காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆலம் என்பவர் ஒரு கம்பால் மம்தா பானர்ஜியின் தலையில் தாக்கினார். இதில் மம்தா பானர்ஜியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது, அவரின் மண்டை ஓட்டிலும் லேசான காயம் ஏற்பட்டது. 

இந்த தாக்குதல் நடந்தபோது மம்தா பானர்ஜிக்கு 35 வயதானது. அதன்பின் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து மம்தா குணமடைந்தார். மம்தா பானர்ஜியை கொலை செய்ய முயற்சித்ததாக ஆலம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மம்தா பானர்ஜிசாட்சியாகினா்.

ஆனால், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தவரை ஆலம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியை முதல்முறையாகக் கைப்பற்றியது. மம்தா பானர்ஜி முதல்வராகினார். அப்போதுதான் ஆலம் வழக்கின் வீரியத்தை உணர்ந்து மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கோரினார். ஆனால், வழக்கு தொடர்ந்து ஆலிப்போர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் ஆலமுக்கு எதிராக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லை, சாட்சி சொல்ல யாரும் முன்வராததால் வழக்கில் இருந்து ஆலமை விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ராதாகந்தா முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில் “ குற்றப்பத்திரிகையில் உள்ள பெயர்களில் ஆலம் மட்டுமே இருந்தார், பலர் இறந்துவிட்டார்கள், சிலர் தப்பி ஓடிவி்ட்டார்கள். இன்னும் தொடர்ந்து பணத்தை செலவு செய்ய விரும்பாத அரசு, வழக்கில் வெற்றி கிடைத்தாலும் பெரிதாக ஏதும் சாதிக்கப்போவதில்லை என உணர்ந்தது. முதல்வர் மம்தா நினைத்தால் வீடியோ மூலம் சாட்சி அளிக்கலாம் அவருக்கும் விருப்பமில்லை. சாட்சிக்கு யாரும் இல்லாததால் வழக்கில் இருந்து ஆலம் விடுவிக்கப்பட்டார்” எனத்தெரிவித்தார்.

 

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆலம் கூறுகையில் “ எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. 29 ஆண்டுகளாக எனக்கு என்ன நடக்கும், என்ன தண்டனை கிடைக்கும் என அச்சப்பட்டேன. இப்போது நான் விடுதலை பெற்றது, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. மம்தா முதல்வராக வந்தபின் நான் மிகுந்த அச்சப்பட்டேன். ஆனால், என்னை மம்தா பழிவாங்கவில்லை. இப்போது கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்கஸ் பகுதியில் சிறிய கடை வைத்து நடத்தி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.