சுதந்திர தின விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை: மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்!
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார்
இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்திற்குப் பிறகு உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில் அதை நீக்கியதாகவும் தெரிவித்தார்.
வாரிசு அரசியல் பற்றி விமர்சித்த பிரதமர் மோடி, மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்; மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி மாற்றங்களை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன், அடுத்த ஆண்டும் கொடியேற்றவேன் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலி காலியாக இருந்தது. நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சுதந்திர தின விழாவை புறக்கணித்தது பேசுபொருளானது. அதேசமயம், வாஜ்பாய் உள்ளிட்ட கடந்த கால பிரதமர்களின் சாதனைகளை எடுத்துக்கூறி வீடியோ மூலம் சுதந்திர தின வாழ்த்து செய்தியை அவர் வெளியிட்டிருந்தார்.
மேலும், அந்த வீடியோவில், “ஒவ்வொரு பிரதமரும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில்தான் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது என்ற பிம்பத்தை கட்டமைக்க சிலர் முயற்சிக்கின்றனர்.” என்று கூறி பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
சுதந்திர தின விழாவை புறக்கணித்த கார்கே.. ஆனால் அவர் சொன்ன வலுவான செய்தி இதுதான்..
இந்த நிலையில், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “முதலில், எனது கண்களில் சில பிரச்சினைகள் உள்ளன. இரண்டாவதாக, நெறிமுறைகளின்படி காலை 9.20 மணிக்கு எனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும். பின்னர், நான் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து இங்கும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டியிருந்தது. எனவே, நான் செங்கோட்டைக்கு வந்து விட்டு திரும்ப முடியாது. ஒருவேளை வந்திருந்தாலும், பிரதமர் செல்லும் முன் வேறு யாரையும் செல்ல விட மாட்டார்கள். பாதுகாப்பு பலமாக இருக்கும். சரியான நேரத்திற்கு என்னால் மற்ற நிகழ்வுகளுக்கு செல்ல முடியாது. பாதுகாப்பு நிலைமை மற்றும் நேரமின்மையால் நான் கலந்து கொள்ள இயலவில்லை.” என்று விளக்கம் அளித்துள்ளார்.