காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டார். 

இதற்கு நம்நாட்டின் வெளியுறவுத்துறை சரியான பதிலடி கொடுத்தது. மேலும், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை தவிருங்கள் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மறைமுகமாக உத்தரவிட்டது. 

இதனால் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வது நின்று விட்டது. இதனால மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்திய வர்த்தகர்கள் இங்கு இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டதால் கவலை கொள்கிறோம். ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு அதிகளவில் பாமாயில் விற்பனை செய்கிறோம் ஆனால் அதேநேரம் நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் சில விஷயங்கள் தவறாக சென்றால், அதனை நாங்கள் சொல்லத்தான் செய்வோம். 


நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும், தவறான விஷயமாக இருந்தால் அது குறித்து பேசத்தான் செய்வேன். தவறான விஷயங்களை நாங்கள் அனுமதித்தால் மற்றும் பணத்தை மட்டும் சிந்தித்தால் அப்புறம் எங்களுக்கும்  மற்ற மக்களுக்கும் அதிகளவில் தவறான விஷயங்கள் நடைபெறும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  
இந்தியாவின் புறக்கணிப்பால் மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு  தனது அரசு தீர்வை கண்டுபிடிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.