போதிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் மக்களைக் கை தட்ட வைப்பதும், விளக்கேற்ற வைப்பதும் கொரோனாவுக்கு தீர்வு ஆகாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சீனாவின் பிறப்பிடமாக கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா இந்தியாவில் கோரத்தாண்டவத்தை ஆரம்பிக்கும் முன்பாகவே மத்திய மற்றும்மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் டார்ச், செல்போன் விளக்குகளை எரிய விடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


 
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில், உலக நாடுகள் மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை தொடர்பாக புள்ளிவிவர படத்துடன் ட்வீட் செய்துள்ளார். அதில், கோவிட்19 வைரசை கண்டறிய இந்தியா போதுமான அளவு பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. மக்கள் கை தட்டுவதாலும், வானில் டார்ச் விளக்கை எரியவிட்டு பிரகாசிக்க செய்வதாலும் பிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை என்றார்.

மேலும், அவர் வெளியிட்ட அந்த புள்ளி விவர படத்தில் தென் கொரியா 10 லட்சம் பேரில் 7,622 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதாகவும், ஆனால், இந்தியா வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், பாகிஸ்தான் கூட இந்தியாவை விட அதிகமாக 67 பேருக்கு பரிசோதனை மேற்கொள்வதாக உள்ளது.