மகாசிவராத்திரி ஊர்வலம்.. திடீரென மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகளுக்கு பாதிப்பு.. இருவர் நிலை கவலைக்கிடம்!
Rajasthan : ராஜஸ்தானில் நடைபெற்ற மகாசிவராத்திரி ஊர்வலத்தில் திடீரென மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற மகாசிவராத்திரி ஊர்வலத்தின் போது 14 குழந்தைகளுக்கு மின்சாரம் தாக்கியதாக போலீசார் இன்று தெரிவித்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹீரலால் நகர் இன்று வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் இப்பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி போலீசார் அளித்த தகவலில் தெரிவித்துள்ளனர். பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
"இது மிகவும் சோகமான சம்பவம், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மொத்தம் இரு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். சாத்தியமான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அலட்சியம் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று திரு. நகர் கூறினார்.
உயர் அழுத்தம் கொண்ட மேல்நிலை மின்கம்பியால் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கவலைக்கிடமான நிலையில் உள்ள குழந்தைகளில் ஒருவர் 100 சதவிகித தீ காயங்களுட சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற 12 குழந்தைகள் 50 சதவிகிதத்திற்கும் குறைவான தீ காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.