இதெல்லாம் மாட்டுகிட்ட வைக்கலாமா?.. படக்குனு தங்க தாலியை விழுங்கிய எருமை - அப்புறம் எப்படி எடுத்தாங்க தெரியுமா?
மஹாராஷ்டிராவில் வாஷிம் மாவட்டத்தில் ஒரு வினோதமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. பொதுவாக கால்நடைகள் உண்ணும்போது, தேவையற்ற பொருட்களை சில சமயங்களில் உண்டுவிடுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் மஹாராஷ்டிராவில் ஒரு எருமை மாடு மிகவும் விலையுயர்ந்த பொருள் ஒன்றை உண்டது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் எருமை ஒன்று தற்செயலாக விலையுயர்ந்த தங்க மாங்கல்யம் ஒன்றை விழுங்கியுள்ளது. சுமார் 20 கிராமுக்கு மேல் எடையுள்ள அந்த மாங்கல்யத்தின் மதிப்பு தோராயமாக 1.5 லட்சம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மாட்டின் உரிமையாளரான ஒரு பெண் குளிப்பதற்கு முன் சோயாபீன் மற்றும் கடலைப்பருப்பு நிரப்பப்பட்ட தட்டில் தன் தாலியை வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார்.
குளித்து முடித்து வெளியே வந்த அந்த பெண், மாட்டிற்கு உணவு கொடுத்துவிட்டு தனது வீடு வேலைகளை செய்ய துவங்கியுள்ளார். சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் தன் தாலி காணாமல் போனதை அவர் உணர்ந்துள்ளார். உடனே அதிர்ந்துபோன அந்த பெண், தாலியை எங்கு வைத்தார் என்பதை நியாபகப்படுத்தி பார்த்துள்ளார். அப்போது தான் மாட்டிற்கு வழங்கும் தீவனத்திற்கு அருகில் தாலியை வைத்ததை அவர் உணர்ந்துள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரதம் எப்போது சாத்தியம்? பிரதமர் மோடி விளக்கம்!
இறுதியியல் மாடு தான் அதை உட்கொண்டுள்ளது என்று தெரிய வந்ததையடுத்து அந்த பெண் உடனடியாக தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார். கணவர் கால்நடை மருத்துவரை அணுகி விஷயத்தை சொல்ல, மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி, எருமையின் வயிற்றில் தான் அந்த தாலி இருக்கின்றது என்பதை உறுதி செய்துள்ளார் அந்த மருத்துவர்.
சம்பவம் நடந்த அடுத்த நாள், அந்த எருமைக்கு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவக் குழுவினர் அதன் வயிற்றில் இருந்து தாலியை வெற்றிகரமாக மீட்டனர். இறுதியில் அந்த மாட்டிற்கு சுமார் 60 முதல் 65 தையல்கள் போட வேண்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கால்நடைகளுக்கு தீவனம் அல்லது வேறு எதையும் கொடுக்கும்போது அனைத்து கால்நடை உரிமையாளர்களும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அந்த மாட்டிற்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் திரு. கவுண்டனே கேட்டுக் கொண்டார். "விலங்குகளுக்கு தீவனம் கொடுக்கும்போது கவனமாக இருக்கவும், அதில் வேறு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.