மகா கும்பமேளா 2025: பிரமிக்க வைத்த நாகா துறவிகள்.. 2ம் நாள் சிறப்பு என்ன?
Mahakumbh Mela 2025 : மகா கும்பமேளாவில் ஆண் நாக சன்னியாசிகளைத் தவிர, பெண் நாக சன்னியாசிகளும் அமிர்த ஸ்நானத்திற்கு வந்திருந்தனர்.
மகா கும்பமேளாவின் இரண்டாம் நாளில் நடைபெற்ற அமிர்த ஸ்நானத்தில் நாக சன்னியாசிகள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். திரிவேணி சங்கமத்தில் நாக சன்னியாசிகள் பெருமளவில் கூடியிருந்தனர். கட்டுப்பாடும் பாரம்பரிய ஆயுதங்களில் நிபுணத்துவமும் கொண்ட நாக சன்னியாசிகள் யாத்ரீகர்களை வியக்க வைத்தனர். ஆயுதப் பயிற்சிகளையும் டமரு இசையையும் நாக சன்னியாசிகள் நிகழ்த்தினர்.
இதையும் படிங்க: நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள்?
சநாதன தர்மத்தின் 13 அகாராக்களும் முதல் அமிர்த ஸ்நானத்தில் பங்கேற்பதால், இந்த புனித நீராடல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமிர்த ஸ்நானத்திற்கு வந்த அகாராக்கள் குதிரை மீதும் கால்நடையாகவும் ஊர்வலமாகச் சென்றனர். தலைமுடியில் பூக்களும் கழுத்தில் மாலைகளும் அணிந்து, திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தபடி நாக சன்னியாசிகள் வருவது மகா கும்பமேளாவின் சிறப்பைக் கூட்டியது. நாக சன்னியாசிகளின் வருகையை ஊடகங்களும் பக்தர்களும் படம்பிடித்தனர். மேளதாளங்களுக்கு ஏற்ப அவர்கள் நடனமாடி தங்கள் பாரம்பரிய சடங்குகளை நிகழ்த்தினர். பின்னர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் நாக சன்னியாசிகள் பங்கேற்றனர். ஆண் நாக சன்னியாசிகளைத் தவிர, பெண் நாக சன்னியாசிகளும் அமிர்த ஸ்நானத்திற்கு வந்திருந்தனர்.
இதையும் படிங்க: மகா கும்பமேளா 2025 கோலாகலமாக தொடங்கியது! பூமியின் மிகப்பெரிய விழா; சுவாரஸ்ய தகவல்கள்!
இதற்கிடையில், மகா கும்பமேளாவிற்கு மக்கள் கூட்டம் இரண்டாம் நாளிலும் தொடர்கிறது. காலை 7 மணிக்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் நீராடலில் கலந்து கொண்டதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அமிர்த ஸ்நானத்தில் பங்கேற்க பல்வேறு சன்னியாசி குழுக்கள் பிரயாக்ராஜுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மகா கும்பமேளாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று அமிர்த ஸ்நானம். முதல் நாளான நேற்று மட்டும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் நீராடலில் கலந்து கொண்டனர்.