2025 Maha Kumbh Mela Fire: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. கடுமையான வெப்பம் தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகாகும்பமேளாவுக்குச் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வந்ததால், நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

“காலை 6:30 மணியளவில் மாருதி எர்டிகா காரில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டெண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” என உ.பி தீயணைப்பு சேவை அதிகாரி விஷால் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மகா கும்பமேளாவுக்காக வந்த ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கடுமையான வெப்பம் தீ விபத்துக்குக் காரணம் என்று தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

ஜனவரி 19ஆம் தேதி கும்பமேளா அரங்கில் தீ விபத்து ஏற்பட்ட ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த விபத்து சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீயை அணைக்க விரைந்து செயல்பட்டனர். இதனால் அந்த விபத்திலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுபோன்ற தொடர் தீ விபத்து சம்பவங்கள் குறித்து விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.