அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பைத் தொடர்ந்து, இருநாட்டு உறவில் புதிய சூத்திரம் உருவாகியுள்ளது. இந்தியா-அமெரிக்க வளர்ச்சிக்காக MEGA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி இருவரும் தங்களது சந்திப்புக்குப் பின்னர் புதிய சூத்திரத்தை கையில் எடுத்துள்ளனர். MAGA அதாவது மீண்டும் அமெரிக்காவை சிறந்தது ஆக்குங்கள் என்பதாகும், இந்தியா குறித்து குறிப்பிடுகையில் MIGA - இந்தியாவை மீண்டும் சிறப்பானதாக ஆக்குங்கள் என்பதாகும். இரண்டு நாட்டுத் தலைவர்களும் இணைந்து MEGA கூட்டணியை உருவாக்கியுள்ளனர். 

இதைத்தான் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ''அதிபர் டிரம்ப் அடிக்கடி MAGA குறித்து பேசி வருகிறார். இந்தியாவில் நாம் விக்சித் பாரத் குறித்து பேசி வருகிறோம். அமெரிக்காவின் மொழியில் அது MIGA என்று கூறப்படுகிறது. இந்தியா - அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இரண்டுநாடுகளும் இணைந்து MEGA கூட்டணியை அமைத்துள்ளது'' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

வாஷிங்டனில் இருக்கும் ஓவல் அலுவலகத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த பிரதமர் மோடியை கட்டி அணைத்துக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''கிரேட் பிரண்ட்'' '' டெரிஃபிக் மேன்'' என்று மோடியை டிரம்ப் அழைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருநாடுகளுக்கும் இடையே பல துறைகளில் கையெழுத்துக்கள் ஏற்பட்டது. வர்த்தகத்தைத் தவிர, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் ஒத்துழைப்பு ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2030 ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தக இலக்கை 500 பில்லியன் டாலர் இலக்காகக் கொள்வது சந்திப்பின் முக்கிய அம்சமாகும். இரு நாடுகளும் கூட்டு மேம்பாடு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு உறுதிபூண்டுள்ளன என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

பாதுகாப்பு: 
இந்தியாவிற்கு F-35 ரக ஸ்டெல்த் போர் விமானங்களை விற்பனை செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த முடிவின் மூலம், ஐந்தாம் தலைமுறை விமானங்களை இயக்கும் நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. "நாங்கள் இந்தியாவிற்கு ராணுவ விற்பனையை பில்லியன் கணக்கான டாலர்களாக அதிகரித்து வருகிறோம். இது இந்தியா F-35 போர் விமானங்களை வாங்குவதற்கு வழி வகுக்கிறது'' என்று டிரம்ப் கூறினார்.

எரிசக்தி துறை:
அமெரிக்காவுடனான தனது எரிசக்தி வர்த்தகத்தை இந்தியா கணிசமாக விரிவுபடுத்த உள்ளது, விரைவில் கொள்முதல் 25 பில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “கடந்த ஆண்டு, நாங்கள் கிட்டத்தட்ட15 பில்லியன் டாலர் அமெரிக்க எரிபொருளை வாங்கினோம். இரு நாடுகளும் வர்த்தகப் பற்றாக்குறையை சமநிலைப்படுத்த பாடுபடுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

26/11 குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தல்:
மோடியின் இந்தப் பயணத்தின் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது 26/11 மும்பை தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்ததுதான். "மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதற்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ''தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதற்கு எனது அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் தஹாவூர் ராணா அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை:.
இந்தியா-சீனா எல்லைப் பதட்டங்கள் குறித்து குறிப்பிட்டு, அதிபர் டிரம்ப், மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்தார். "எல்லையில் நடக்கும் மோதல்களை நான் கண்காணித்து வருகிறேன். அவை மிகவும் கொடூரமானவை. "நான் உதவ முடிந்தால், உதவ விரும்புகிறேன்" என்று அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சர்ச்சைகளை இருதரப்பு ரீதியாக தீர்க்க இந்தியா நம்புகிறது என்றும் குறிப்பிட்டார்.

பரஸ்பர வரிவிதிப்பு 
வர்த்தக ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய மையமாக இருந்தாலும், தனது நிர்வாகம் வரிவிதிப்புகளில் "பரஸ்பர அணுகுமுறையை" பின்பற்றும் என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். "இந்தியா அல்லது வேறு எந்த நாடும் குறைந்த வரிகளை வசூலித்தால், நாங்கள் குறைந்த வரிகளை வசூலிப்போம். அமெரிக்கா மீது இந்தியா என்ன வரிகளை விதித்தாலும், நாங்களும் அதையே வசூலிப்போம்" என்று டிரம்ப் வர்த்தகக் கொள்கைகள் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டைக் கூறாமல் கூறினார். தங்களது நட்பு நாடுகள்தான் அதிகமான வரிகளை விதிப்பதாகவும் சூசகமாக தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றம்:
 அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்ற தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். தவறான பொய் வாக்குறுதிகள் கொடுத்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள் என்பதையும் மோடி குறிப்பிடத் தவறவில்லை. ஆனால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் அவர்களை திருப்பி அழைத்துக் கொள்வதில் இந்தியாவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார்.

ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி:
ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார், நடுநிலைமை என்பதை நிராகரித்தார். "இந்தியா நடுநிலை வகிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. நான் ரஷ்யா மற்றும் உக்ரைன் இரண்டிற்கும் நெருக்கமாக இருக்கிறேன். மேலும் போருக்கான தீர்வை போர்க்களத்தில் அல்ல, பேச்சுவார்த்தையின் மூலம் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார். மோதலைத் தீர்க்க அதிபர் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

டிரம்ப்பின் புதிய வர்த்தகப் போர்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பிரிக்ஸ் குறித்த டிரம்பின் பரபரப்பான கருத்துக்கள்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பு குறித்த தனது நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். "BRICS மோசமான நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது. அமெரிக்க டாலருடன் விளையாடினால் 100% வரி விதிக்கப்படும். எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு நாட்டு நாணயத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தால் நாங்கள் 100 சதவீத வரி போடுவோம்'' என்றார்.

தன்னாட்சி அமைப்புகள் தொழில் கூட்டணி (ASIA)
பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் தன்னாட்சி அமைப்பு தொழில் கூட்டணியை (ASIA) தொடங்கியுள்ளன. இந்த அமைப்பு குறிப்பாக தன்னாட்சி அமைப்புகள், அடுத்த தலைமுறை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின்படி, தன்னாட்சி அமைப்புகளில் கவனம் செலுத்தும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான அமெரிக்க-இந்தியா சாலை வரைபடத்தில் ASIA ஒரு முக்கிய அங்கமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தன்னாட்சி தொழில்நுட்பங்களை உருவாக்க ஆண்டூரில் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மஹிந்திரா குழுமத்திற்கு இடையே ஒரு புதிய கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது. கூடுதலாக, L3 ஹாரிஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இதற்கு உறுதுணையாக இருக்கும்.

மோடிக்கு டிரம்ப் அளித்த பரிசு:
இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் வெள்ளை மாளிகையில் மகிழ்ச்சியான நேரத்தைக் கழித்தனர். ஹவுடி மோடி மற்றும் நமஸ்தே டிரம்ப் நிகழ்வுகளின் முக்கிய தருணங்களை உள்ளடக்கிய ஒன்றாக எங்களது பயணம் என்ற புத்தகத்தை மோடிக்கு டிரம்ப் பரிசளித்தார். டிரம்ப் கையெழுத்திட்ட அந்தப் புத்தகத்தில், "பிரதமர் அவர்களே, நீங்கள் சிறந்தவர்" என்று எழுதப்பட்டுள்ளது.

Indias Nuclear Energy: இந்தியாவின் கடந்த 10 ஆண்டுகால அணுசக்தி உற்பத்தி சாதனைகள் என்ன?