மதுரை ரயில் தீ விபத்து - சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு!
மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய ரயில்வேத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரயில்களில், சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பிரத்யேகமாக ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயணிக்கலாம். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த குழு ஒன்று ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக பிரத்யேகமாக ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்துள்ளது.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 பேர் கொண்ட குழுவானது கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்பட்டு தமிழகம் வந்துள்ளனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கும் சென்ற அக்குழுவினர், கடைசியாக பத்மநாபசுவாமி கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து, ரயில் பெட்டிகள், புனலூர்-மதுரை விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகளும் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இணைப்பு ரயில் மூலமாக சென்னை சென்று, அங்கிருந்து வேறு ரயிலில் அவர்களது பெட்டிகள் இணைக்கப்பட்டு மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலம் செல்லவிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 5.15 மணியளவில் ஆன்மீக சுற்றுலா குழு வந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைஅவ்ரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயடைந்த சில மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர் முதல் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் சொந்த மாநிலமான உத்தரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.2 லட்சமும், தெற்கு ரயில்வே தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அளித்துள்ளது.
மதுரை ரயில் தீ விபத்தில் 10 பேர் பலியானது எப்படி? இதுதான் காரணமா? வெளியான பகீர் தகவல்.!
தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்துக்கு ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் காரணம் என தெரியவந்துள்ளது. அதிகாலையில் தேநீர் போடுவதற்கு சிலிண்டரை பயன்படுத்தி அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பிரத்யேகமாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்பதால், பாதுகாப்பு கருதி அவர்கள் அந்த பெட்டியை பூட்டி வைத்துள்ளனர். இதனால், தீப்பிடித்ததும் அவர்களால் உடனடியாக தப்பிக்க இயலவில்லை.
ரயில்களில் சிலிண்டர்கள் எடுத்துச் செல்ல தடை உள்ள நிலையில், சுற்றுலா வந்த குழுவினர் சிலிண்டர் எடுத்து வந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ போலீஸாருக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்மீக சுற்றுலா குழுவை ரயிலில் அழைத்து வந்த தனியார் சுற்றுலா நிறுவனம், ரயிலில் என்னென்ன பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்கிறோம் என்றும், ரயில்வேயின் விதிமுறைப்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் எதையும் ரயிலில் எடுத்து போகப்போவதில்லை என்று தெரிவித்து சான்றிதழ் பெற்றுத்தான் அங்கிருந்து பயணிகளை அழைத்து வந்துள்ளனர். இருப்பினும், சட்டவிரோதமாக ரயிலில் சிலிண்டர் பயன்படுத்தியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதால், தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.