வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.450: அரசு அதிரடி அறிவிப்பு!
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.450 வழங்கப்படும் என மத்தியப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது
மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் மாநில அரசின் முதலமைச்சர் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் ரூ.450க்கு மானிய விலையில் வழங்கப்படும் என மத்தியப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. சிலிண்டருக்கான மீதமுள்ள செலவை மாநில அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதியிட்டு இது அமல்படுத்தப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அல்லாமல், முதலமைச்சர் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் தங்கள் பெயர்களில் எரிவாயு இணைப்புகளை பதிவு செய்திருக்கும் அனைத்து நுகர்வோரும் இந்த திட்டத்தின் கீழ் பலனடைவார்கள் என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ கடை டூ செங்கோட்டை: பிரதமர் மோடி அரசியல் பயணம்!
அதன்படி, சிலிண்டருக்கான மீதமுள்ள தொகை செப்டம்பர் 1, 2023 முதல் தகுதியான இணைப்பு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நுகர்வோருக்கு ஒவ்வொரு சிலிண்டர் மறு நிரப்பலுக்கு மானியத்தைப் பெறுவார்கள். தகுதியான நுகர்வோர் சந்தை விலையில் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர், மத்திய, மாநில அரசுகளின் மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, அந்தந்த மாநில அரசுகளும், மத்திய பாஜக அரசும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வரிசையில், மத்தியப்பிரதேச மாநில அரசு சிலிண்டருக்கான மானியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையை மத்திய ரூ.200 குறைத்தது.