மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுவை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு சட்டப்பேரவையில் சீட் கொடுக்க அம்மாநில காங்கிரஸ் கட்சி புது யுக்தியை கையில் எடுத்துள்ளது. 

இந்நிலையில் மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் 15 ஆயிரம் ‘லைக்’மற்றும் டுவிட்டரில் 5000 பேர் பின் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகள் மட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினரின் ‘வாட்ஸ்அப்’ குழுக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவற்றிற்கு எல்லாம் மிக முக்கியமானது மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு பதிவையும் லைக் மற்றும் ரிடுவீட் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.