கேரளாவில் ஒருதலைக்காதல் இளம் பெண்ணை வீட்டில் வைத்து உயிருடன் தீ வைத்த எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவர் காக்கநாடு பகுதியை சேர்ந்த 17-வயது பெண்ணை பல மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலை பலமுறை கூறியபோதும் அதை ஏற்க அந்த பெண் மறுத்துள்ளார். இதனால், அவர் மீது நிதின் கடும் ஆத்திரத்தில்  இருந்துள்ளார். மேலும், தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என திட்டமிட்டார்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெற்றோருடன் அந்த பெண் உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நிதின் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை தட்டிய போது அப்பெண்ணின் தந்தை திறந்துள்ளார். 

நிதின் அப்பெண்ணை பார்க்கவேண்டும் ஆத்திரத்தில் கத்தினார். இதனையடுத்து அப்பெண் வெளியே வந்த உடன் அவர் மீது மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றியுள்ளார். அத்துடன் அவரும் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பெண்ணை காப்பாற்ற சென்ற தந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக காதலிக்கவில்லை என்றால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்வது, தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட சம்பவம் கேரளாவில் அதிகரித்து வருகிறது.