எங்களைக் கொன்றுவிடாதீர்கள் என்று கேரளாவில் கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியொன்று,  ஒரு அரசியல் கட்சிக்கு,  கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஹாரிசன். கண்ணூர் மாவட்டத்திலுள்ள வாழப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஷகானா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்துவந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பதிவிட்டனர். 

இதில், ஷகானாவின் உறவினர்களும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார் ஹாரிசன். சமீபத்தில் நீனு என்பவரை மணந்த கெவின் என்ற வாலிபர், அந்தப் பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டார். சாதி மோதலின் காரணமாக, இந்தக் கொலை நிகழ்ந்தது. இந்த நிலையில், நான் இன்னொரு கெவின் ஆக விரும்பவில்லை என்று கூறியுள்ளார் ஹாரிசன். தங்களது திருமணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டபிறகே, இந்த பிரச்சினை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். 

எந்த நேரம் வேண்டுமானாலும், என்னைக் கொல்வதாக மிரட்டியுள்ளனர். எனது தாய், தந்தை மற்றும் சகோதரியைக் கொல்லப்போவதாகக் கூறியுள்ளனர். இதனால் எனது தந்தைக்கு போன் செய்யக்கூட மனமில்லாமல், இந்த வீடியோவைப் பதிவேற்றுகிறேன்” என்று அவர் வீடியோவில் பேசியுள்ளார்.ஹாரிசனைக் காதலிக்கும்போது, தனது மனதில் சாதி, மதம் பற்றிய சிந்தனைகள் வரவில்லை என்று கூறியுள்ளார் ஷகானா. “நான் இப்போதும் முஸ்லிமாகத் தான் இருக்கிறேன். 

அவர் என்னை மதம் மாற்றவில்லை. நானும் மதம் மாறப்போவதாகச் சொல்லவில்லை. எங்கள் இருவரையும் கொல்வதால், உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? எனது சுயவிருப்பத்தின் பேரிலேயே, இவருடன் வந்துள்ளேன். நான் சாகவிரும்பவில்லை; இவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.