அதுமட்டுமல்லாமல் ‘வொயிட் பீல்ட் பகுதியின்(பெங்களூரு அருகே ) அர்னால்ட் சுவாஸ்நேக்கர்’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 

பெங்களூரு அருகே வர்தூர் ராமகுண்டஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜி. பாலகிருஷ்ணா(வயது25). இவர் தற்போது தண்ணீர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், படிப்பை பாதியில் கைவிட்டு, தற்போது லாரிடிரைவராக பணிபுரிந்து வருகிறார். 

தினந்தோறும் 6 மணிநேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பாலகிருஷ்ணா, 2013-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த 24 வயதுக்குட்பட்டோருக்கான ‘மிஸ்டர் யூனிவர்ஸ்’ பட்டத்தையும், 2014-ம் ஆண்டில், ஏதென்ஸ் நகரில் நடந்த ‘மிஸ்டர் யூனிவர்ஸ்’ பட்டத்தையும் கைப்பற்றினார். இந்நிலையில், கடந்தவாரம்பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த பிலிப்பைன்ஸ்-ஆசியா மிஸ்டர் ஆசியா பட்டத்தையும் கைப்பற்றி பாலகிருஷ்ணா நாடு திரும்பியுள்ளார்.

இது குறித்து பாலகிருஷ்ணா கூறுகையில், “ மிஸ்டர் ஆசியா பட்டத்தைக் கைப்பற்றியதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு நான் செய்த 6 மணி நேர கடின பயிற்சியும், என் அம்மா பர்வதம்மா, சகோதரர் சுரேஷ் ஆகியோரின் ஆதரவும் நான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாகும். மும்பை, மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஆணழகன் பட்டம் வென்ற புகழ்பெற்ற வீரர்களான சங்ராம் சோக்லா, மணிஷ்குமார் ஆகியோர் என்னிடம் பயிற்சி பெற்றவர்கள்தான்'' என்று தெரிவித்தார். 

உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என்ன சாப்பிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு பாலகிருஷ்ணா கூறுகையில், “ நான் சாப்பாடு விஷயத்தில் உடம்பு கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதால் கவனமாக இருக்கிறேன். தினமும், 750 கிராம் கோழிக்கறி, 25 முட்டை, 300 கிராம் அரிசி சாதம், 200 கிராம் காய்கறிகள், மீன், மற்றும் பழங்கள் சாப்பிடுகிறேன். போட்டியில் கலந்து கொள்ளும் முன் 120 கிலோ இருந்த நான் தற்போது 90 கிலோ எடை இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.