நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்கக் கட்டணத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுங்கக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மனு அளித்தனர். ஆனாலும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு உறுதியாக மறுத்து வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா கோதா காலனியில் வசித்து வந்த விமல் திவாரி என்ற லாரி டிரைவர் உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி சென்றுள்ளார்.

இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கலிண்டி கஞ்ச் டோல்கேட்டில் லாரியை நிறுத்திய டோல்கேட் ஊழியர்கள் 14 ஆயிரத்து 600 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று விமலை மிரட்டியுள்ளனர்.

ஆனால் விமல் பணம் செலுத்த மறுத்துவிட்டார். அப்போது அவர்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறில் ஊழியர்கள் விமலை அடித்துள்ளனர். பின்னர் அவர் லாரியை நிறுத்தி விட்டு நடந்து சென்றுள்ளார்.

அதன்பின் அவரை காணவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நொய்டா பகுதியில் காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். விமல் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விமலை அடித்து ஆற்றங்கரையோரம் வீசியதாக ஏழு டோல்கேட் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டோல்கேட்களில் பணி புரியும் ஊழியர்கள்  பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்கினறர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில்  சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்தால் ஏற்பட்ட கோபத்தில், லாரி டிரைவரை டோல்கேட் ஊழியர்கனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.