திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
வைணவத்தை பின்பற்றுவர்களிடையே வடகலை, தென்கலை நாமம் பிரச்சனை காலம் காலமாக இருந்து வருகிறது. வடகலையை பின்பற்றுபவர்கள் ஆங்கில U எழுத்து வடிவிலும், தென்கலையை பின்பற்றுபவர்கள் Y வடிவிலும் திருநாமத்தை நெற்றியில் இட்டு கொள்வது வழக்கம்.
திருப்பதி கோயிலில் மூலவருக்கு எந்த வகையான நாமம் இடுவது என்ற பிரச்சனை ஆங்கிலேயர் காலத்தில் எழுந்தபோது நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது.
அதில், நாமத்தை U வடிவிலோ, அல்லது Y வடிவிலோ அமைக்காமல் இரண்டுக்கும் பொதுவாக தமிழ் எழுத்தான ப வடிவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான மூலவருக்கு அணிவிக்கப்படும் திருநாமத்தை U வடிவில் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சத்தலு மாற்றி அமைத்தார். தோல்மாலை சேவையின் போது இதனை பார்த்த ஜீயர்கள் அர்ச்சகர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோயில் துணைச் செயல் அலுவலர் கோதண்டராமனிடம் புகார் அளித்த அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் தோல் மாலை சேவையில் ஜீயர்கள் பங்கேற்க போவதில்லை என்று எச்சரித்தனர்.
ஜீயர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரதான அர்ச்சகர் ரமண தீட்சத்தலுவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மூலவர் கருவறைக்குள் பேரனை அழைத்து சென்றது தொடர்பாக ஏற்கனவே ரமண தீட்சத்தலுவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மூலவரின் திருநாமத்தை ரமண தீட்சத்தலுவின் மகன் U வடிவில் மாற்றியதால் அபிஷேக சேவையில் பங்கேற்க 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
