Loksabha election result 2024 களையிழந்த பாஜக அலுவகம்... கொண்டாட்டத்தில் காங்கிரஸ்..!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவுக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும் போட்டியாக உள்ளன.
பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பெருமான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு அதிகமாக பாஜக தனித்து வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. கட்சி அலுவலகத்தில் ராகுல், பிரியங்கா காந்திக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இணிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை காங்கிரஸ் தொண்டர்கள் பரிமாறிக் கொண்டனர்.
அதேசமயம், பாஜக அலுவலகம் களையிழந்து காணப்படுகிறது. முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே இரு அலுவலகங்களும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வந்தனர். தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். ஆனால் இந்த முறை உற்சாகம் குறைவாகவே உள்ளது. பாஜக முன்னிலையில் இருந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றி கை கூடவில்லை என்பதால் அக்கட்சியினர் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வரும் தேர்தல் முடிவுகள்?
அதேசமயம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரைக்கு பலன் கிடைத்துள்ளது. தோல்வி முகமாகவே இருந்தாலும், கடந்த முறை போன்று அல்லாமல் பிரதான எதிர்கட்சியாக அமரும் வாய்ப்பு தற்போதைய நிலவரப்படி அக்கட்சிக்கு உள்ளது.
இருப்பினும், வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையடையவில்லை. பல தொகுதிகளில் குறைவான எண்ணிக்கையைலேயே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே, காட்சிகள் மாறும் பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.