இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கவுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1ஆம் தேதி கடைசி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. அதன்மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கவுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 12 மாநிலங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று அதிகால வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய ஏப்ரம் 4ஆம் தேதி கடைசி நாளாகும்.
100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் உயர்வு!
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டத்தில் அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், மணிப்பூரின் 13 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பகுதிக்கும் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.