Loksabha Election 2024 கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் நாடகம் அம்பலம்!
கேரள மாநிலம் கொல்லம் பாஜக வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் நாடகம் அம்பலமாகியுள்ளது
தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கேரள மாநிலம் கொல்லம் பாஜக வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமார் புகார் கூறிய நிலையில், போலிசாரின் விசாரணையில் அது பொய் என தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசராம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் பாஜக சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். அவர் கொல்லம் முளவனா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்னர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரின் கையில் இருந்த ஒரு கூர்மையான ஆயுதம் கிருஷ்ணகுமாரின் வலது கண்ணை தாக்கியது.
பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்!
இதில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போடப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக, கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் அவர் புகார் கூறி வந்தார்.
இந்த நிலையில், எதிர்கட்சியினர் தாக்கியதாக கூறிய கேரள மாநிலம் கொல்லம் பாஜக வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் நாடகம் அம்பலமாகியுள்ளது. பாஜக தொண்டர் 'சனல்' என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.