3வது முறை வெற்றி வாகை சூடிய மோடி! உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து! காத்திருக்கும் அமெரிக்கா!
பாஜக கூட்டணி பெற்றுள்ள வெற்றியை அடுத்து, 3வது முறையாக பிரதமர் ஆவார் என்று நம்பப்படும் நரேந்திர மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர்.
3வது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2024 பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஆட்சி அமைக்க உள்ளது. மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஆட்சி அமைப்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணி பெற்றுள்ள வெற்றியை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் நரேந்திர மோடியை வாழ்த்தியுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது தேர்தல் வெற்றியைப் பெற்ற மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்தார்.
13 மத்திய அமைச்சர்கள் படுதோல்வி! பாஜகவுக்கு வசமாக ஆப்பு வைத்த மக்கள் தீர்ப்பு!
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா ஆகியோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவருடன் நெருக்கமாக பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். நேபாள பிரதமர் பிரசாந்தா தேர்தலுக்கு முன்பே பாஜக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மோடியின் வெற்றிக்கு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸூவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள மோடிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, தொடர்ந்து இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்திய அரசாங்கத்தையும் மக்களையும் அமெரிக்கா பாராட்டியது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், நாட்டின் மிகப்பெரிய தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்தியாவையும் அதன் வாக்காளர்களையும் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார். இறுதி முடிவுகளைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் பாஜக 240 இடங்களில் வெற்றி அடைந்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பாஜகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி 232 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ரயில் பயணிகள் வீட்டிலிருந்தே ஓபன் டிக்கெட் எடுக்கலாம்! இதுதான் ரொம்ப ஈசியான வழி!