மக்களவை தேர்தல் மற்ற மாநிலங்களில் விறுவிறுப்பு இருக்கிறோதோ இல்லையோ உத்தரபிரதேச மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இம்முறை பாஜகவுக்கு மக்களவை தேர்தல் களம்  அவ்வளவு சாதகமாக இல்லை. காரணம் அந்த மூன்று பெண்களின் வலிமை அப்படி! 

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரசாரம் சூறாவளி கிளப்பியது.  மொத்தமுள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜக தனது வசமாக்கியது. அங்கு ராஜ்ஜியம் நடத்தி வந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பூஜ்யமே கிடைத்தது. ஆனால், கடந்த தேர்தலைப்போல இந்த முறை மோடியின் சூறாவளி பிரச்சாரம்  துளியும் எடுபடாது போலிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மாயாவதி, ப்ரியங்கா காந்தி டிம்பிள் யாதவ் ஆகிய வலிமையான மூன்று பெண் தலைவர்கள்.

 

மாயாவதியின் பகுஜன் சமாஜ் இம்முறை சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அத்துடன் கணிசமான தலித் ஓட்டுகளும், உயர் வகுப்பினரின் வாக்கு வங்கியும் இவரது கட்சிக்கு பலம். தீவிர பிரசாரத்தையும் தற்போது முன்னெடுத்து வருகிறார்.  கருத்து கணிப்பிலும் இந்த கூட்டணிக்கு அதிக தொகுதிகளில் வெற்றியை ஈட்டும் என கூறப்படுகிறது. 

 

மற்றொரு சக்திவாய்ந்த தலைவராக அங்கு உருவெடுத்து இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின்  பிரியங்கா காந்தி. தீவிர அரசியலில் இவர் காலடி எடுத்து வைத்திருப்பது பாஜக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிழக்குப் பகுதி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பெரும் உற்சாகத்துடன் பிரசார களத்தில் இறங்கியிருக்கிறார் அவர். அடுத்த இந்திரா காந்தியாகவே உ.பி மக்களால் கொண்டாடப்படுவதும் இவரது ப்ளஸ். பிரியங்கா காந்தி செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

மூன்றாவது தலைவர் சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி. முலாயம் சிங், அகிலேஷ் போன்ற தலைவர்களின் தாக்கம் இல்லாமலேயே  டிம்பிள் யாதவுக்கு இங்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அரசியல் நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர். அகிலேஷ் முதல்வராக இருந்த காலத்தில் டிம்பிளின் ஆலோசனைப்படியே பல முக்கிய பிரச்னைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மூன்று பெரும் பெண் தலைவர்கள் இருப்பதால் பிரதமர் மோடியின் மேஜிக் எடுபாடாது என்றே கூறப்படுகிறது. இதனால், உத்தரபிரேத முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.