கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான தேவகவுடா காங்கிரஸ் கட்சிக்குக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலையும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள இரு கட்சிகளும் ஏற்கனவே முடிவு செய்துள்ளன. தொகுதிகள் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் இன்னும் முறைப்படி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. ஆனாலும், இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்துகளைக் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா அதைத் தொடங்கி வைத்திருக்கிறார். 

“நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். சுமூகமாக தொகுதி பங்கீடு நடைபெறும் என நம்புவதாகவும்” என்று தேவகவுடா கூறியிருக்கிறார். அதற்கு முன்பாக கட்சி கூட்டத்தில் தேவகவுடா பேசும்போது, “கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால், தனித்து போட்டியிடவும் தயார்” என்று தேவகவுடா காங்கிரஸ் கட்சிக்குக் கிலியை ஏற்படுத்தியிருந்தார். 

தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில், தேவகவுடா பிடிவாதம் காட்டத் தொடங்கியிருப்பதைக் கண்டு காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து விரும்பும் தொகுதிகளைக் கேட்டு தேவகவுடா முரண்டு பிடிப்பாரே என்றும் காங்கிரஸ் கவலையில் மூழ்கியுள்ளது.

ஏற்கனவே உ.பி.யில் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் அமைத்திருப்பதால் காங்கிரஸ் கவலையில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் நிபந்தனை விதிக்கத் தொடங்கியிருப்பதால், காங்கிரஸ் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.