பாஜக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கங்கனா ரனாவத் உள்பட 111 வேட்பாளர்கள் அறிவிப்பு
பிரதமர் மோடியின் ரசிகை என்று சொல்லுக்கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டிவி சீரியலில் ராமனாக நடித்த அருண் கோவில் ஆகியோருக்கு பாஜகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான ஐந்தாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் நவீன் ஜிண்டால், ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் மீரட் தொகுதியில் அருண் கோவில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பிரதமர் மோடியின் ரசிகை என்று சொல்லுக்கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டிவி சீரியலில் ராமனாக நடித்த அருண் கோவில், ஆகியோர் இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களம் காண உள்ளனர். இன்று பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலுக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்து வருண் காந்தி நீக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் அவரை எதிர்த்து கே சுரேந்திரன் போட்டியிடுகிறார்.
உஜியார்பூரில் நித்யானந்த் ராய், பாட்னா சாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத், பெலகாமில் ஜெகதீஷ் ஷெட்டர், சம்பல்பூரில் தர்மேந்திர பிரதான், பூரியில் சம்பித் பத்ரா, பிலிபிட்டில் ஜிதின் பிரசாதா, தம்லுக்கில் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா மற்றும் துர்காபூரில் திலிப் க்மான்ஹோஸ்தாய் ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு தொகுதிகளை மையமாக வைத்து 15 பேர் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டது. புதுச்சேரியில் நமச்சிவாயம், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார், திருவள்ளூரில் பொன்.பாலகணபதி, வட சென்னையில் ஆர்.சி.பால் கங்கராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி ஆகியோரை பாஜக களமிறக்குகிறது. அதிமுக முன்னாள் தலைவரான கார்த்தியாயினி 2017ஆம் ஆண்டு பாஜகவுக்கு தாவியவர்.
மார்ச் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்நாட்டில் களமிறக்கப்பட்டுள்ளனர்.