புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று கூடும் சிறப்பு அமர்வு!
மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று கூடவுள்ளது
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதத்துடன் நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் வரலாறை நினைவு கூர்ந்து பேசினர். அதன் தொடர்ச்சியாக, மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று கூடவுள்ளது.
மக்களவை பிற்பகல் 1:15 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 2:15 மணிக்கும் கூடவுள்ளது. தற்போதைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவிற்குப் பிறகு சிறப்பு அமர்வானது புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்ளது. இந்த அமர்வில் மொத்தம் எட்டு மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜேஎம்எம் தலைவர் ஷிபு சோரன் மற்றும் பாஜக எம்பி மேனகா காந்தி ஆகியோர் மைய மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், குழு புகைப்படமும் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு அமர்வானது வருகிற 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
டெல்லியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடம் அமைந்துள்ளது. இந்த சூழலில் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் டெல்லியில் 4 மாடிகளைக் கொண்ட ரூ.970 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும்.