இன்னும் இரு மாதங்களில் இந்தியாவுக்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் நாட்டின் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளான் அமைப்பு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு எப்போது தீரும் என்ற மனநிலையில் மக்கள் இருந்துவருகிறார்கள். ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியா பொருளாதாரம், கொரோனா வைரஸால் பல பாதிப்புகளைச் சந்திக்கும் என்று கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்தியாவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் வகையில் இன்னும் இரு மாதங்களில் வெட்டுக்கிளிகள் இந்தியாவைத் தாக்கும் என்று உணவு மற்றும் வேளான் அமைப்பு எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


“ஆப்ரிக்காவை மையம் கொண்டுள்ள வெட்டுக்கிளிகள், அங்கிருந்து பாலைவன வெட்டுக்கிளிகளுடன் சேர்ந்து ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும். இந்த வெட்டுக்கிளிகள் வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளை நிலங்களை கடுமையாக பாதிக்கும். இதனால், இந்தியா உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இந்தியாவின் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உணவு உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


 ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் மட்டும் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். இந்த வெட்டுக்கிளிகள் தினமும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை அழித்துவிடும் ” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கொரோனா வைரஸால் பல பாதிப்புகளை இந்தியர்கள் சந்திக்கும் வேளையில், இரு மாதங்களில் வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் உணவு, வேளாண் பாதிக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.