புதுச்சேரியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வகை ஒமைக்ரான் உலக நாடுகளை மட்டுமல்லாமல் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் உச்சத்தில் இருக்கிறது. மேலும் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 495 பேர். இதனால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் வார இறுதியில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி, மருத்துவத்துறை அமைச்சர், துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி யுனியன் பிரதேசத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மால்கள், வணிக நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கம் உள்ளிட்டவற்றில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கே இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு அமலில் உள்ளது. அதுவும் ஜன.31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களிலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே இருக்க வேண்டும் யுனியன் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மதுபானக் கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பலரும் புதுச்சேரியில் குவிந்தனர். இது நடந்து முடிந்த பிறகே அங்கே கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாகவே கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன என்று கூறப்படுகிறது.
