உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 6 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 5,734 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 166 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 14 ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அது மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியது. இந்தநிலையில் இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அங்கு ஜீன் 17ம் தேதி வரை கல்வி நிலையங்களை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாநில அமைச்சரவை கூட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 30 வரை விமான சேவைகளை நீட்டிக்க வேண்டாம் எனவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஒடிசாவில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 2 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.