தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தர முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு சாக்குபோக்குகளை கூறி கடந்த 3 ஆண்டுகளாக காலம் காலம் கடத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்வி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்? பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்துள்ளது என்று கூறினார்.

 

இதனையடுத்து. ராசாவின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்குகள் உள்ளது என்று கூறினார்.