loan postponed for maharashtra farmers

பயிர்கடன் தள்ளுபடி செய்யக்கோரி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்தசில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. இதனால், விவசாயத்துக்காக வங்கியில் பயிர்கடன் வாங்கிய விவசாயிகள் பலர் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளும் கடும் இன்னல்களைச் சந்தித்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்ற பா.ஜனதா அரசு, அங்கிருக்கும் விவசாயிகள் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, மஹாராஷ்டிராவிலும் பயிர்கடன் தள்ளுபடி செய்யும் கோரிக்கை வலுப்பெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பால், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விவசாயிகள் சாலையில் கொட்டி பயிர்கடன் தள்ளுபடி செய்யக் கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை அதிகப்படுத்தவும் அரசை வலியுறுத்தினர்.

கிராமங்களில் இருந்து மும்பை , புனே உள்ளிட்ட பெருநகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், பால் செல்லாத வகையில் சாலையை முடக்கி நூதன வகையில் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் வன்முறை வெடித்தது, விவசாயிகள் சாலை மறியல் செய்து பெரிய அளவில் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது.

போராட்டம் 2வது வாரமாக தீவிரம் அடையும் நிலையில், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அரசு நேற்று முடிவு செய்தது. இதன்படி மாநிலத்தில் உள்ள 1.06 கோடி விவசாயிகளில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் எனத் தெரிகிறது.

இது குறித்து மாநில நிதி அமைச்சர் சுதிர் முகந்திவார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவ, அவர்களின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உடைய விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள். இதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, கடன் தள்ளுபடி பெற தகுதியான விவசாயிகள் குறித்து ஆய்வு செய்யும்” எனத் தெரிவித்தார்