ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் டோங் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமாவுடன் நேற்று முதல்வரின் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தார். 

கூட்டத்தில் முதல்வரை சந்தித்த அந்த சிறுமி, தனது தாய் இறந்து விட்டதாகவும், தற்போது 15 வயதாகும் என்னை குழந்தை திருமணத்துக்கு என் தந்தை கட்டாயப்படுத்துகிறார். எனவே குழந்தை திருமணத்தை நிறுத்தி எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட் சிறுமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிறுமியின் சோகக்கதையை கேட்டு அவரின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டோங் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டார். 

மேலும், அந்த சிறுமியிடம் எதிர்கால கனவுகள் குறித்து கேட்டு அறிந்தவுடன், சிறுமியின் கனவுகளை நிறைவேற்ற அரசு உதவும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார். சாரதா பாலிகா உறைவிட பள்ளி திட்டத்தின்கீழ்  அந்த சிறுமிக்கு இலவச கல்வியும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை திருமணத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும் இன்னும் ஒரு சில இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தை திருமணத்தால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததை இவை இன்னும் தொடருவதற்கு முக்கிய காரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.