உத்தரப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் என மக்கள் வரும் எந்த இடத்திலும் மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை, மக்கள் வராத பகுதியில்தான் மதுக்கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி  ஆத்தியநாத் அதிரடியாக உத்தரவு பிறபிப்பித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாரதியஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்குபின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களைக் கவரும் வகையில், பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அது சில நேரங்களில் சர்ச்சைகளையும் உண்டாக்கி வருகிறது. 

பெண்களை பாதுகாக்க ஆன்ட்டி ரோமியோ படை, விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி, மின்கட்டணத்தில் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ஒழுக்க நெறிகள், பான்மசாலா, குட்கா மெல்லத் தடை போன்ற உத்தரவுகள் வரவேற்பைப் பெற்றாலும், சட்டவிரோத இறைச்சிக் கடைகளை மூடுவது என்ற உத்தரவு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இந்நிலையில், லக்னோவில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்,ஏராளமான மதுக்கடைகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு முன்புஇருந்த அரசு, 2018ம் ஆண்டு வரை மதுக்கடைகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்து கொடுத்துவிட்டது.

இருந்தபோதிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தேசிய, மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்கு அப்பால்தான் எந்த மதுக்கடையையும் திறக்க வேண்டும். பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் என மக்கள் கூடும்இடங்களில் மதுக்கடைகள் திறக்கக்கூடாது. மதுக்கடைகள், மக்கள் வாழாத பகுதியில் தான் திறக்க வேண்டும்.

 விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவையும், கலால் வரிக்கொள்கையையும் அரசு உருவாக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த உத்தரவால், மாநிலத்தில் மதுக்கடை நடத்தும் தனியார் உரிமையாளர்கள், எங்கு கடையை மாற்றுவது எனத் தெரியாமல் தலைமுடியை பிய்த்துக்கொண்டுள்ளனர்.