புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பீர் 10 ரூபாய் வரையும், மற்ற மதுபான வகைகள் குறைந்த பட்சம் ரூபாய் 7 முதல் 30 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் 450-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளுக் கடைகள் உள்ளன. இங்கு ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1,300-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதுவை அரசின் கலால் துறை மதுபானங்களுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி உள்ளிட்ட வரிகளை நிர்ணயிக்கிறது. அண்மையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலால் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான அரசாணை கடந்த ஜூலை 24-ம் தேதி வெளியானது. அதன்படி, புதுவையில் பீர் உள்ளிட்ட மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த, சாதாரண ரக மதுபானங்களுக்கு குவார்ட்டருக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையும், நடுத்தர, உயர்தர மதுபானங்களுக்கு ரூ. 10 முதல் ரூ. 50 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, பீர் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 10 முதல் ரூ. 15 வரை அவற்றின் விலை உயர்ந்துள்ளது. 

இந்த நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. கலால் வரி, கூடுதல் கலால் வரி விதிப்பால் அரசுக்கு ரூ.117 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.