Liquor available in ATM at Kerala

மது வகைகளை வாங்க கடைகள் முன் குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, ‘ஏ.டி.எம். எந்திரம் போன்று பணம் செலுத்தியவுடன் தானாக மது பாட்டில் வழங்கும் எந்திரங்களை அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கேரள மாநில மதுவிற்பனை கழகம், திட்டம் குறித்த அறிக்கையை மாநில அரசுக்கு அளித்துள்ளது.

ஏ.டி.எம். போன்று

கேரள மதுவிற்பனை கழகம் மாநிலம் முழுவதும் அமைக்க இருக்கும் எந்த எந்திரங்களில், மதுப் பிரியர்கள், பணத்தை செலுத்தியவுடன், அது தேவையான மதுவகைகளை உடனடியாக வழங்கும். ஆனால், நபர் ஒருவருக்கு மதுபாட்டில் வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும்.

இந்த திட்டம் குறித்து கேரள மாநில மதுவிற்பனை கழகத்தின் மேலாண் இயக்குநர் எச்.வெங்கடேஷ் கூறியதாவது-

வரிசையை குறைக்க

 எங்களின் மதுவழங்கும் எந்திரம் திட்டம் என்பது மது இல்லாத மாநிலமாக ஆக்க வேண்டும் என்பது இல்லை, மது விற்பனை கடைகளில் இருக்கும் கூட்டத்தை குறைக்க வேண்டும்.

 மதுக்கடைகளில் நீண்டவரிசையில் நிற்கும் குடிமகன்களின் கூட்டம் குறித்த வழக்கு ஒன்றை கடந்த ஆண்டு ஜுலை மாதம் உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில் “ கூட்டத்தினரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள், அல்லது காத்திருப்பு அறை ஒன்றை ஏற்படுத்துங்கள். இந்த கூட்டத்தால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது’’ என்று அறிவுறுத்தியது.

அனுமதிக்காக காத்திருப்பு

இதையடுத்து, நாங்கள் டோக்கன் மூலம் மது வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினோம், இதனால், ஓரளவுக்கு கூட்டம் குறைந்தது. இருந்தபோதும் நீண்ட வரிசையை முற்றிலும் ஒழிக்கவே, இந்த தானியங்கி மதுபாட்டில் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. அரசின் அனுமதி கிடைத்தவுடன் எந்திரங்கள் அமைக்கும் பணியைத் தொடங்குவோம்.

மொபைல் ஆப்ஸ்

முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட மது வழங்கும் எந்திரங்கள் இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படும். மேலும், மொபைல் ஆப்ஸ் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் குடிமகன்கள் அருகே இருக்கும் மதுவழங்கும் எந்திரம், அங்கு என்ன வகையான மது வகைகள் இருப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.