கறுப்புபண ஒழிப்பின் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மத்தியஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கறுப்புப்பண ஒழப்பின் ஒரு பகுதியாக போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க, இந்திய வர்த்தக சம்மேளனங்கள் கூட்டமைப்பின் 4-வது ஆண்டுவிழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி பேசியதாவது:

கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக போலி நிறுவனங்களைக் கண்டறிந்து முடக்கம் நடவடிக்கையில் ஏற்கனவே 2.26 லட்சம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இப்போது 2-வது கட்டமாக 55ஆயிரம் போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கறுப்புப்பணத்தை தொழில்துறைக்கு பயன்படுத்தக்கூடாது என்பதால், அரசு கவனத்துடன் இருக்கிறது. இதுதவிர சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது, போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற தொழில்துறை நிறுவனங்கள் பெயரில் நடைபெறுவதையும் அரசுஒருபோதும் அனுமதிக்காது.

சந்தேகத்துக்குரிய நடவடிக்கையில் ஈடுபட்ட மற்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிவித்தார்.