ஓரினச்சேர்க்கை காரணமாக தன் பெண் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, பின்னர் காதலியோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா தாகூர் (30). இவர் தனியா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மேக்னா (3) என்ற பெண் குழந்தை இருந்தது.

ஆஷா தாகூர், தன்னுடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணான பாவ்னா தாகூர் (28) என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஓரினச்சேர்க்கை ஜோடி ஆஷா - பாவ்னா தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். தங்களின் தற்கொலை எழுதி வைத்துவிட்டு, குழந்தை மற்றும் பாவ்னா தாகூருடன் ஆஷா தாகூர் வீட்டை விட்டு வெளியேறினர்.

சபர்மதி நதி அருகே அவர்கள் சென்றனர். அப்போது ஆஷா, தனது குழந்தை மேக்னாவை ஆற்றில் வீசினார். பின்னர் துப்பட்டா கொண்டு அவர்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையால் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஷா தாகூர், பாவ்னா தாகூர் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.