பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் போது மர்ம விலங்கு தென்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி தவிர 71 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் போது மர்ம விலங்கு ஒன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் தென்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

பிரதமர் மோடி, அமைச்சர்கள் பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு பிரதமர்கள், தூதர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மோடி 3.0 கேபினட்... யாருக்கு எந்த துறை? இன்று அமைச்சரவை கூட்டம்!

பதவியேற்பு விழாவில், மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி. துர்காதாஸ் உய்கி என்பவர் பதவியேற்றதும் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து பதவியேற்பு ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு எழுந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தபோது, அவருக்கு பின்னால் உள்ள படிக்கட்டுகளுக்கு மேலே விலங்கு ஒன்று நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளில் உள்ள அந்த விலங்கு சிறுத்தை போன்று உள்ளது. சிலர் அதனை பூனை எனவும் கூறுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும், பிரதமர் மோடி, அமைச்சரவை பதவியேற்பின்போது, மர்ம விலங்கு ஒன்று தென்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.