திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகம் மீது, ஆகம சாஸ்திரி விதிமீறல்கள் நடப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் நேற்று, ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார். அங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “ஆகம சாஸ்திரங்களை மீறி பல அத்துமீறல் கோயிலில் நடைபெறுகிறது. மகாலகு தரிசனம் தேவையில்லை என பலமுறை கூறினாலும், தேவஸ்தான அதிகாரிகள் அதை கண்டுகொள்வதில்லை.

இதேபோன்று, பவித்ரோற்சவத்தின்போது, அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் மட்டுமே விமான கோபுரத்தின் மீது ஏறவேண்டும் என்று கூறினாலும் இதையும் யாரும் பொருட்படுத்துவதில்லை. பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அனால், அதிகாரிகள் வியாபார நோக்கத்தை கைவிட வேண்டும். இதேபோன்று நடந்துகொண்டால் யுக தர்மத்தை நாம் காக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். இதன் மூலம் ‘கோயில் தர்மம்’ சுமார் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அபாயமும் உள்ளது.

கோயிலுக்குள் இரும்பு படிக்கட்டுகள் கட்ட நான் ஆலோசனை வழங்கினேன். இது ஆகம விதிகளை மீறியது ஆகாது. பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்போது மட்டுமே இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இது தற்காலிகமானதுதான்” என்றார்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் சந்திரபாபுநாயுடு உறுதியளித்தார்.