முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு கூற நினைத்தால் முஸ்லீம் வாரியத்திடம் கூறுங்கள் எனவும் முத்தலாக் முறை குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறவில்லை எனவும் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது.

இதில் சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என்ற சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 

இந்த மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

முத்தலாக் மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் முத்தலாக் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்வர்ராஜா தெரிவித்தார். 

முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு கூற நினைத்தால் முஸ்லீம் வாரியத்திடம் கூறுங்கள் எனவும் முத்தலாக் முறை குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும் முத்தலாக் மசோதாவால் முஸ்லிம் பெண்களுக்கு எந்த பலன்களும் கிடைக்காது எனவும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது இஸ்லாம் தான் எனவும் பேசினார்.