லஷ்கர்-இ-தொய்பா ஆட்சேர்ப்பு பயங்கரவாதி ஹபிபுல்லா சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் லஷ்கர்-இ-தொய்பா ஆட்சேர்ப்பு பயங்கரவாதி ஹபிபுல்லா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவின் டேங்க் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியும் அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவருமான ஹபிபுல்லா கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் 20க்கும் மேற்பட்ட உயர்மட்ட பயங்கரவாதிகள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஹபிபுல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சி நகரில் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியான அட்னான் அகமது படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹபிபுல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தேடப்பட்டு தப்பியோடிய பிரபல தாதா தாவூத் இப்ராஹிம், மர்ம நபர்களால் விஷம் வைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியான அதே நாளில் ஹபிபுல்லா மரணம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் இலக்கு வைக்கப்பட்டு அரங்கேற்றப்படும் கொலை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்திய அதிகாரிகளால் தேடப்படும் நபர்களை சட்டத்தின் நிறுத்தும் பொருட்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
“குற்றம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் தேடப்படுபவர்கள், அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், ஆனால் பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அமைதியற்ற வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வாவின் டேங்க் மாவட்டம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தலைப்பு செய்திகளில் இடம் பெறுகிறது. கடந்த 15ஆம் தேதியன்று போலீஸ் தலைமையகம் மற்றும் ஒரு சோதனைச் சாவடியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் 4 பேரும், போலீஸ் அதிகாரிகள் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்க்வாவின் டேங்க் மாவட்டத்தில் உள்ள போலீஸ் லைனில் நடந்த மற்றொரு தாக்குதலில் மூன்று போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர், பிரதான நுழைவாயிலில் ஒரு பயங்கரவாதி தன்னைத்தானே வெடிக்க வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். மற்றவர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர். இந்த தாக்குதலுக்கு அன்சாருல் ஜிஹாத் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
அதேபோல், கைபர் பழங்குடி மாவட்டத்தில் உள்ள நல்லா பாரா தெஹ்சிலில் உள்ள கூட்டு போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல்கள், அந்நாட்டில் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு மற்றும் ராணுவ நிலைகள் மீதான இடைவிடாத தாக்குதல்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து தொடர்ந்து கவலைகளை எழுப்புகின்றன.