மத்திய பிரதேசம் மாநிலம் துரியாவில் உள்ள பெஞ்ச் தேசிய பூங்காவில் குரங்கு ஒன்று மரத்தினூடே அமர்ந்திருந்த புகைப்படம் கடந்த சில தினங்களாக செம வைரலாகிவருகிறது. ஃபோட்டோகிராஃபர் அமன் வில்சன் என்பவர்தான் அந்த புகைப்படத்தை எடுத்தவர். அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அந்த புகைப்படம் தான் செம வைரலானது.

இந்த புகைப்படத்தை எடுத்தது குறித்த அனுபவத்தையும் அந்த புகைப்படத்துடன் சேர்த்தே பதிவிட்டுள்ளார் ஃபோட்டோகிராஃபர் அமன் வில்சன். அவர் இட்ட அந்த சுவாரஸ்யமான பதிவை பார்ப்போம்.

”மத்திய பிரதேசம் மாநிலம் துரியாவில் உள்ள பெஞ்ச் தேசிய பூங்காவிற்கு நான்(அமன் வில்சன்) மேற்கொண்ட பயணத்தின் போது நடந்த நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன். லாங்டி என்ற சுறுசுறுப்பான பெண் புலி அங்கு பிரபலம். நான் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் நிறைய ஜீப்புகள் நின்றுகொண்டிருந்தன. அது ஏன் என்பது எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. அந்த ஜீப்புகள் நின்றது, லாங்டியை காண்பதற்காகத்தான். ஆனால் நான் சென்றபோது லாங்டி அங்கு இல்லை. அங்கிருந்து சென்றுவிட்டது. லாங்டியை காண முடியாததை நினைத்து வருத்தப்பட்டேன்.

அனைத்து ஜீப்புகளும் அங்கிருந்து நகர்ந்தன. ஆனால் நான் மட்டும் அங்கிருந்து நகராமல் இன்னும் கொஞ்ச நேரம் அங்கு காத்திருக்க விரும்பினேன். நான் காத்திருந்தது நல்லாதாக போயிற்று. அப்போது அங்கு லாங்கர் வகை குரங்கு கூட்டம்(தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இருக்கும், நீண்ட வாலும் சாம்பல் நிற அல்லது இளமஞ்சள் நிற உடலும் கறுப்பு முகமும் உள்ள பெரிய குரங்கு) ஒன்று வந்தது. லைட்டிங் நன்றாக இருந்ததால், அவற்றை நான் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.

அதில் ஒரு குரங்கு ஒரு மரத்தின் நடுவே இருந்த இடைவெளியில் ஏறி அமர்ந்தது. மரத்தின் நடுவே இருந்த வெட்டு, அந்த குரங்கு அமர்வதற்கு ஏற்றவாறு இருந்தது. அந்த மரத்தின் நடு வெட்டுப்பகுதியில் அப்படியே பொருந்திப்போனது அந்த குரங்கு. லாங்டியை(பெண் புலி) காண முடியாத கோபத்தையும் விரக்தியையும் இந்த குரங்கு தீர்த்தது. நான் காத்திருந்ததால் தான் தனித்துவமான அந்த புகைப்படத்தை என்னால் எடுக்க முடிந்தது” என்று அமன் வில்சன் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி அனைவரையும் கவர்ந்துவருகிறது.