மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத்துக்கு, உடல்நிலை மேலும் பாதிப்படைந்துள்ளது. இதனால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் சில வாரங்களில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையாட்டி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லாலு பிரசாத்துககு ஜாமீன் வழங்கப்பட்டது.

 

ஆனால் அவருக்கு உடல்நிலை குணமாகவில்லை. தொடர்ந்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்துக்கு திடீரென காலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. இதனால், அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக அவருக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்துள்ளது. அவருக்கு இன்சுலின் உள்ளிட்ட மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் சிறுநீரக பிரச்சனையாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. அவருக்கு தொடர்ந்து மருந்துகள் செலுத்தப்படுவதால், பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலில் உள்ள கொப்பளங்கள் குணமாக மேலும் சில நாட்கள் ஆகும் என்றும் அதன் பிறகே மற்ற சிகிச்சைகளை தொடர முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.