லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் தகுதிநீக்க உத்தரவு வாபஸ்! ராகுல் விவகாரத்திலும் இப்படி நடக்குமா?
லட்சத்தீவு எம்பி முகமது பைசலுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டதால், அவர் மீதான தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு எம்பி முகமது பைசல் மீதான கொலை முயற்சி வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட 10 வருட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால், மக்களவைச் செயலகம் அவரைத் தகுதிநீக்கம் செய்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மக்களவைச் செயலகம், தகுதிநீக்க உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் லட்சத்தீவு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிக்கியதில், கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இதன் விளைவாக மக்களவை உறுப்பினர் பதவியை அவர் இழந்தார். கவரொட்டி நீதிமன்றத் தீர்ப்பைக் காரணமாகத் தெரிவித்து மக்களவைச் செயலகம் முகமது பைசலை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தது.
கொலை வழக்கில் ஜாமீன் வழங்கலாமா? முதல் முறையாக ChatGPT -ஐ கேட்டு தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!
கவரொட்டி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, முகமது பைசலுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், முகமது பைசல் குற்றவாளி என்று கூறிய கவரொட்டி நீதிமன்ற தீர்ப்பும் தடை செய்யப்பட்டது. ஜனவரி 25ஆம் தேதி இந்தத் தடை உத்தரவு வெளியானதும் பைசல் தன்னைத் தகுதிநீக்கம் செய்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு மக்களவைச் செயலகத்துக்குக் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தற்போது தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், முகமது பைசல் மீண்டும் லட்சத்தீவு தொகுதி மக்களவை உறுப்பிடராக தன் பணியைத் தொடர முடியும். ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்திலும், இதேபோல நடைபெற வாய்ப்பு உள்ளது. அது ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மேல்முறையீட்டில் வரும் தீர்ப்பைப் பொறுத்தது.
தரமற்ற, போலியான மருந்துகளைத் தயாரித்த 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!