குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நகர நீதிமன்றத்தில் கணவர் மீதான வழக்கில் கடந்த ஒரு ஆண்டாக சட்டநடவடிக்கை ஏதும் எடுக்காததைக் கண்டித்து, பெண் ஒருவர், ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டம் நடத்த முயன்றார்.
ஆமதாபாத் அருகே வட்வா எனும் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தான் இந்த வித்தியாசமான போராட்டத்தை கடந்த 18-ந்தேதி நடத்த முயன்று தடுத்து நிறுத்தப்பட்டார்.
இது குறித்த விவரம் வருமாறு...
நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண், தனது சிறுவயது(மைனர்) மகளை தனது கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று குற்றம்சாட்டி கடந்த ஆண்டு, தனது கணவர் மீது போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது கணவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த(எப்.ஐ.ஆர்.) போலீசார் அவரை கடந்த ஒரு ஆண்டாக கைது செய்யவில்லை.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை சட்டத்தில்(போஸ்கோ) வழக்கு பதியப்பட்டதை அறிந்த அந்த பெண்ணின் கணவர், டெல்லிக்கு தப்பிச் சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்.
கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகியும், தனது கணவர் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்த அந்த பெண் முடிவு செய்தார்.
இதையடுத்து, ஆமதாபாத் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் வந்த அந்த பெண் சென்றார். வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைக்கு சென்ற அந்த பெண் நீதிபதி முன், தனது கணவருக்கு எதிராக விரைவாக வழக்கு நடத்தி தீர்ப்பு அளியுங்கள் என சத்தம் போட்டு, தனது ஆடைகளை களையத் தொடங்கினார்.
இதைப் பார்த்து அங்கிருந்த நீதிபதி, வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்து செய்வது அறியாது திகைத்தனர். உடனடியாக அருகில் இருந்த பெண் போலீசார், வழக்கறிஞர்கள் அந்த பெண் மேலும் ஆடைகளை களையாமல் தடுத்து நிறுத்தி, அவரை அழைத்துச் சென்றனர்.
நீண்டநேரத்துக்கு பின், அந்த பெண், நீதிமன்ற பதிவாளர் அறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அந்த பெண்ணிடம் இதுபோல் மீண்டும் செய்யமாட்டேன், நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க மாட்டேன் என எழுதி வாங்கி அவரை அனுப்பினர். மேலும், அந்த பெண்ணின் கோரிக்கையை விரைவாக பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தனர்.
இதுபோல் பெண்கள் நிர்வாணப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்துவது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், உத்தரப்பிரதேசத்தில் 5 பெண்கள் இதேபோல் நிர்வாணப் போராட்டம் செய்தனர். போலீசார் தாங்கள் கொடுத்த புகாரை பெற மறுக்கிறார்கள் என கூறி அந்த 5 பெண்களும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
