ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் கொட்டும் பனியில், எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில், தீவிரவாதிகளை துணிச்சலாக எதிர்கொண்டு, பாதுகாப்பு பணியில் வீரர்கள் மட்டுமல்ல, வீராங்கனைகளும் துப்பாக்கி ஏந்தி ஈடுபட்டு வருகின்றனர்.
192 கி.மீ நீளம் கொண்ட ஜம்மு சர்வ தேச எல்லைப்ப குதியில், எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவில்(பி.எஸ்.எப்.) 90 பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த 90பெண்களும் சராசரியாக 23 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் . இவர்கள் தங்கள் குடும்பத்தினரோடும், பிள்ளைகளோடும் பட்டாலியன் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். காலையில், வீட்டுக்காக பணி செய்து, இரவு நேரத்தில் நாட்டைக் காக்கும் பணியில் இந்த பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் அனுபாலா, ரபிந்தர் என்ற இரு வீராங்கனைகள் கூறுகையில், நாங்கள் இந்தியாவின் புதிய பெண்கள். பெண்களின் வலிமையை தெரியவைக்க புறப்பட்டு இருக்கிறோம். எங்களில் 90 வீராங்கனைகள், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய 2008-ம் ஆண்டில் இருந்து எல்லைப்பாதுகாப்புபடைப் பிரிவில் இருக்கிறோம். ஆனால், முதல் முறையாக, கடுமையான துப்பாக்கிச்சூடு நடக்கும் அக்னூர், அர்னியா, ஆர்.எஸ்.புரா ஆகிய பகுதிகளில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளோம்.
கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி இரவு முழுவதும் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறதா, எல்லையைத் தாண்டுகிறார்களா என கண்காணித்து வருகிறோம். எங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள், நாங்கள் செய்யும் பணியைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.
ஆண்களுக்கு ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.
