கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் பெரும் பீதிக்கு உள்ளாகினர்.

எனவே, தாங்கள் வைத்திருந்த கருப்பு பணத்தை குப்பை தொட்டிகளிலும், சாக்கடைகள் மற்றும் தெருக்களில் வீசி சென்றனர்.அதுமட்டுமின்றி தங்களது சொந்தக்காரர்கள் வங்கி கணக்குகளிலும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கணட் மாநிலத்தை சேர்ந்த பான் மசாலா விற்கும் தொழிலாளியின் சேமிப்பு கணக்கில் அவருக்கு தெரியாமலே 1௦ கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கணட் மாநிலத்தை சேர்ந்த பப்பு குமார் திவாரி பான் மசாலா விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கிரிடி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள தனது சேமிப்புக் கணக்கில் ரூ.4500 சேமிப்பு செய்து வைத்துள்ளார்.

தனக்கு பணம் தேவைப்பட்டதால் வங்கிக்கு சென்ற அவர், 1௦௦௦ ரூபாய்க்கான சலானை நிரப்பி கொடுத்துள்ளார்.

அப்போது, பப்பு குமாரின் கணக்கைப் பார்த்த அதிகாரிகள் அதில் ரூ.10 கோடி இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து பப்புகுமார் திவாரியிடம் வங்கி அதிகாரிகள் விசாரித்தபோது, அதிர்ச்சி அடைந்த அவர், ரூ.10 கோடி தனது கணக்கில் எப்படி வந்தது என்ற விபரம் தெரியாது என்றார்.

இதையடுத்து போலீசார் பப்புகுமார் திவாரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சாதாரண கூலி தொழிலாளியின் கணக்கில் 10 கோடி ரூபாய் செலுத்தியது யார் என போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.