ஐஐடி மெட்ராஸின் உதவியுடன், வாட்டர்ஃபிளை டெக்னாலஜிஸ் ஒரு தனித்துவமான ஸீகிளைடரை உருவாக்கத் தயாராகி வருகிறது. இதில் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் பயணிக்கலாம். மேலும் இதற்கு ரூ.600 மட்டுமே செலவாகும் எனக் கூறப்படுகிறது.
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வெறும் மூன்று மணிநேரத்தில், வெறும் ரூ.600 கட்டணத்தில் பயணிப்பது வெறும் கற்பனை என்று தோன்றலாம். ஆனால் அந்தக் கனவு விரைவில் நனவாகும். ஐஐடி மெட்ராஸின் இன்குபேஷன் செல் ஆதரவுடன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வாட்டர்ஃபிளை டெக்னாலஜிஸ், ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் இந்தப் புதிய கண்டுபிடிப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார். ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிப்பதில் சிலிக்கான் வேலியுடன் போட்டியிடுவதாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்த அவரது பதிவு மக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
"கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சி பற்றிய செய்திகள் வருகின்றன. இதில் எனக்குப் பிடித்தது நமது பரந்த நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியாக இருப்பது மட்டுமல்ல, இந்த வாகனத்தின் வடிவமைப்பும் மிகவும் அற்புதமானது!" என்று ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஏரோ இந்தியா 2025 இல், நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷ் ராஜேஷ், எலெக்ட்ரானிக் சீ-கிளைடர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயணத்தை மலிவாகவும் வேகமாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இவை தண்ணீரில் இருந்து நான்கு மீட்டர் உயரத்தில் பறக்கும் விங்-இன்-கிரவுண்ட் (WIG) வாகனமாக இருக்கும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, "கொல்கத்தாவிலிருந்து சென்னை வரையிலான 1,600 கி.மீ பயணத்தை ஒருவர் வெறும் 600 ரூபாய்க்குள் முடிக்கலாம். இது ஏசி மூன்று அடுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தை விட மலிவானது" என்று ராஜேஷ் கூறுகிறார்.
இந்த ஸ்டார்ட்-அப்பின் மற்றொரு இணை நிறுவனரான கேசவ் சவுத்ரி, இந்த தனித்துவமான கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்குகிறார். "இந்த வாகனம் நீரின் மேற்பரப்புக்கு மிக அருகில் பறக்கும் என்றும், இதன் மூலம் இறக்கைகளில் உராய்வு குறைகிறது. இதனால் குறைந்த வேகத்தில்கூட பறக்க முடியும்" என்கிறார்.
உதாரணமாக, ஒரு வழக்கமான ஏர்பஸ் A320 அல்லது போயிங் 737 கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு பறக்க 2.5 முதல் 3 டன் வரை விமான எரிபொருள் (ATF) பயன்படுத்துகிறது. தற்போது விமான எரிபொருள் கிலோலிட்டருக்கு சுமார் ரூ.95,000 ஆகும். இருப்பினும், வாட்டர்ஃபிளையின் ஸீகிளைடர் இந்தச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்,. இதன் மூலம் டிக்கெட்டுகளை மிகவும் மலிவு விலையில் வழங்க முடியும்.
தனித்துவமான வடிவமைப்பின் மூலம் உற்பத்தி செலவும் வழக்கமான விமானத்தை விட கணிசமாகக் குறையும் என்றும் கேசவ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். "அதிக உயரத்தில் பறக்காததால், குறைந்த காற்று அழுத்தத்துடன் போராட வேண்டியதில்லை, அதாவது இந்த ஸீ-கிளைடரை விமானத்தைப் போல வலுவாக உருவாக்க வேண்டிய அவசியமில்லை. இது கட்டுமான செலவைக் கணிசமாகக் குறைக்கிறது" என்று அவர் விளக்குகிறார்.
இதன் என்ஜின் வழக்கமான விமானங்களைப் போல சக்திவாய்ந்ததாக இருக்கவேண்டிய அவசியமில்லை. "ஒரு விமானம் ஓடுபாதை முடிவதற்குள் பறக்க வேண்டும், ஆனால் இந்த வாகனத்திற்கு முழு கடலும் இருக்கிறது. ஓடுபாதைக்கு ஒரு வரம்பு இல்லை. இது என்ஜின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாது" எனகிறார்.
தற்போது, இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஏரோ இந்தியாவில், வாகனத்தின் வடிவமைப்பை மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது. 100 கிலோ எடையுள்ள முதல் மாடல் அடுத்த சில மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு டன் எடையுடன் பெரிய மாடல் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். 2026ஆம் ஆண்டுக்குள் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு பயணிக்கக்கூடிய 20 இருக்கைகள் கொண்ட ஸீ-கிளைடரை உருவாக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும் நிறுவனம் சார்பில் பாதுகாப்புத் துறையிலிருந்தும் நிதி திரட்ட முயல்கிறார்கள். எதிர்காலத்தில், இந்தத் தொழில்நுட்பத்தை சரக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.
